“‘சக்திஒளி’” மாத இதழ் பற்றிய அன்னையின் சில அருள்வாக்குகள் :
- “ஒவ்வொருவர் வீட்டிலும் ‘சக்திஒளி’ இருக்க வேண்டும் , எந்தெந்த வீட்டில் சக்திஒளி இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன் மகனே! “
- “ ‘சக்திஒளி’ வெளியிடும் பொறுப்பையும் பெண்கள் ஏற்றுச் செய்ய வேண்டும்.ஓவ்வொரு வீட்டிற்கும் காலண்டர் இருப்பது போல ‘சக்திஒளி’ இருக்க வேண்டும் “
- “யார் யார் வீட்டில் ‘சக்திஒளி’ ‘சக்தி மாலை’ இதழ்கள் இருக்கின்றதோ அவர்கள் நலமுடன் வாழ்வார்கள்.”
- “நம் பக்தர்கள் மற்றும் தொண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு ‘சக்திஒளி’ எப்போதும் இருக்க வேண்டும் . நல்ல எண்ணத்தோடு செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் வெற்றியாக முடியும் . அதை அனுபவத்தில் உணரலாம் .”
“‘சக்திஒளி’” பற்றி அன்னையின் ஆசியுரை முதல் இதழில் :
- “உலகமெல்லாம் சக்திநெறி ஓங்க வேண்டும் ;
- ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் .”
‘உலகில் இன்று காணப்படும் துயரங்கள் அனைத்தும் நீங்கி , மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் ‘ என்றே – அன்னை ஆதிபராசக்தி – இம்மருவத்தூர் மண்ணில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வருகிறாள். மக்களிடம் பக்தியும் நல்ல எண்ணமும் , ஆன்மிக ஈடுபாடும் கட்டாயம் வேண்டியவையாகும்.இவைகளை கருவாகக்கொண்டே ‘சக்தி ஒளி’ திங்கள் இதழ் வெளிவருகிறது.
‘இன்றைய அறிவியல் உலகில், ‘நல்லது இது – கெட்டது இது’ என மக்கள் யாரும் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை!. இம்மயக்கம் தீர்ந்து-அனைவரும் மெய்ஞானக் கண் கொண்டு அஞ்ஞானம் அகற்றி வாழ-அன்னையின் திருவருளால் அவள் அருளாணை தாங்கி வரும் ஏடு இது!.
‘பக்தர்கள் அனைவரும் இவ்விதழ் மூலம் சக்தியின் தண்ணருள் அனைத்தும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்களாக!.
“‘சக்திஒளி’” :
ஆன்மிக ஒளி பரப்பும் அறிவுச்சுடரான ‘சக்திஒளி’ மாத இதழ் நமது சித்தர் பீடத்தில் 1982 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
பல ஆன்மிகவாதிகளும் , தமிழ் சான்றோர்களும் , இலக்கிய மேதைகளும் , உயர் கல்வியாளர்களும் , மருத்துவ வல்லுனர்களும் , பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களும் ஆரம்ப நாட்களில் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரமாக விளங்கும் நமது “அம்மா” அருள்திரு பங்காரு அடிகளாரைப் பற்றி தெளிவான பல கட்டுரைகளை வெளி உலகிற்கு ‘சக்திஒளி’ இதழ் மூலம்தான் எடுத்துரைத்தனர்.
நமது சித்தர் பீடத்தின் மகிமைகள் , அற்புத நிகழ்வுகள் , பக்தர்களின் உண்மை அனுபவங்கள் , அன்னையின் அரிய பல சித்தாடல்கள் ஆகியவை அனைத்தும் ‘சக்திஒளி’ இதழ் மூலமாகத்தான் உலக மக்கள் அறியப் பெற்றனர்.
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தகுந்தாற்போல் ‘சக்திஒளி’ மாத இதழ் அம்மாவின் அருளால் புதுப் பொலிவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது ‘சக்திஒளி’ இதழில் , அன்னையின் முத்தான அருள்வாக்குகள் , பொருட்செறிவுள்ள பல கட்டுரைகள்,சித்தர் பீடத்தைப் பற்றிய பல்துறை வல்லுனர்களின் கண்ணோட்டங்கள் , வாழ்க்கை அனுபவங்கள் ,இளம் சிறார்களுக்கான அம்மாவின் வரலாற்றுப் படக்கதைகள் , சித்தர்பீடத்தின் விழாக்களைப் பற்றிய கட்டுரைகள் , மற்றும் ஆதிபராசக்தி கல்வி நிறுவனச் செய்திகள் ஆகியவை நல் விருந்தாக வாசகர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கிணங்க ‘சக்திஒளி’ இதழின் பெருமையையும் , அதனைப் பெறுவதன் மூலம் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகும் அருளையும் மக்களுக்கு எடுத்துரைத்து அனைவர் இல்லங்களிலும் அன்னை ஆதிபராசக்தி ‘சக்திஒளி’ வடிவில் உலா வரத் தொண்டாற்றி அன்னையின் அருளுக்குப் பாத்திரமாவோமாக!.